சுயதரிசனம்

வரவேற்கிறோம்

தமிழ் ஒலி களஞ்சியம்

Tamil Oli Kalanjiyam

வானலைகளில்  இதுவரை நான்.....

11வயதில் ஆரம்பித்த பயணம் . அழையாவிருந்தாளியாய் இலங்கை வானொலிக்கலையகத்தில் அடியெடுத்து வைத்தேன். சிறுவர் மலரைப் பார்க்க, நண்பன் ஜோசப்எட்வர்டுக்கு வந்த அழைப்போடு ஒட்டிக்கொண்ட நாள் அது. பச்சைமலைத்தீவு தொடர் நாடகத்தில் பூதமாக நடித்து வந்த சிறுவனுக்கு , அன்று உடல்நிலை , சரியில்லை. வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களுக்குக் குரல்பரிசோதனை . அடித்தது அதிர்ஷ்டம். தொடர்ந்து எனக்கே வாய்ப்பு. அதனைத் தாரைவார்த்துக் கொடுத்தவன், பின்னாளில் என் உடன்பிறவாச் சகோதரனான, எஸ்.ராமதாஸ் (மரிகார்).

வானொலி மாமாக்களான, எஸ்.நடராஜன், கருணைரத்தினம், வி.ஏ.கபூர், சரவணமுத்துமாமா ஆகியோர் மறக்க முடியாதவர்கள்.

( வானொலி அக்கா பொன்மணி குலசிங்கத்தின் அரவணைப்போ அறிவிப்பாளரான பின்னரும் தொடர்ந்தது). மீசையரும்பும் பருவத்தில் இளைஞர் மன்றத்துக்குப் பதவியுயர்வு. வானொலி அண்ணா வ.அ.ராசையா அவர்களது வழிகாட்டல் ஒரு இலக்கியம். விடலைப்பருவத்திலேயே கல்விச்சேவைப்பகுதி, மற்றும் தேசியசேவையின் நாடகம், உரைச்சித்திரம், முஸ்லிம் சேவையின் நாடகம் உரைச்சித்திரம், அனைத்திலும் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு கணிசமான சன்மானத்தைக் கைநிறைய உழைக்கும் காலம்பிறந்தது.   

கனவிலும் நினைத்திராத அறிவிப்பாளர் பணிக்குத் தேர்வு நடைபெறவிருந்த வேளையில் மூத்த ஒலிபரப்பாளர் திரு.வே.அ.சிவஞானம் மாமா, முதுகில் இரண்டு தட்டுத்தட்டி நண்பன் நடராஜசிவத்தையும் விண்ணப்பப்படிவம் நிரப்பவைத்து போகத்தூண்டினார். திரைக்குபின்னால் குரல் பரிசோதனை, குரலின் முதிர்ச்சி முதில் தேர்விலேயே வெற்றி. நேர்முகத் தேர்வுக்குப் போனதும் நடுவர்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள். கட்டைக்களிசான் போட்டுக் கொண்டு இரண்டும் கெட்டான் வயதில் ஒரு பையன் வழிதவறி வந்துவிட்டானோ என்று. பொது அறிவுக் கேள்விகளும், மொழி பெயர்புப் பரீட்சையும், சாதகமாகவே அமைந்திட, ஒலிபரப்புக் குடும் பத்தில், வயதில் மிகக் குறைந்த அறிப்பாளன் என்ற பெருமையோடு மூத்த அறிப்பாளர்கள் மத்தியில் வலம் வந்தேன்.

அறிவிப்புப் பணியில் நன்நெறிப்படுத்திய அண்ணன் எஸ்.கே.பரராஜசிங்கம், வயது வித்தியசம் பாராது சம வய தொத்தவனாக என் மீது பாசத்தைக்காட்டிய அண்ணன் எஸ்.பி.மயில்வாகனன், இவர்கள் இருவருமே வர்தக சேவையின் இரு கண்கள். வெறுமனே விளம்பரம் வாசித்துப் பாடல்களை ஒலிபரப்பும் எல்லையோடு நின்றுவிடாமல் ஒலிபரப்புத் துறையின் அனைத்து அம்சங்களையும் கற்றுணர வேண்டும் என்ற முனைப்பு ஆரம்ப முதலே முகிழ்த்திருந்தது. அதற்குக் களம் அமைத்தவர் முஸ்லிம் சேவையின் முன்னாள் கட்டுப் பாட்டாளர், மர்ஹீம் எம்.எச்.குத்தூஸ் அவர்கள். மத வேறுபாடின்றி வானொலி நேயர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றிருந்த முஸ்லிம் நாடகங்களை அவர் தயாரிக்கும் போது உடனிருந்து அவதானித்து பின்னாளில் அவர் இல்லாமலேயே ( அவரது பெயரில் ) நூற்றுக்கணக்கான நாடகங்களை பல புதிய நுட்பங்களோடு நெறிப்படுத்தித் தயாரித்த அனுபவம், தேசிய சேவையில் மாதந்தோறும் ஒரு மணி நேர நாடகங்களைத் தயாரிக்கும் பொறுப்பினை பணிப்பாளர் பொன்மணிகுலசிங்கம் அவர்கள் என்னிடம் ஒப்படைக்கும் நம்பிக்கைக்கு வழிவகுத்தது. எனது தயாரிப்பில் வரலாறுபடைத்த சில நாடங்கள் :

  • நூல் வடிவிலும் வெளிவந்த பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசனின ரோமியோ ஜூலியட், கவிதைநாடகம்.

  • (சி.டி.) இறுவட்டு வடிவிலும் வெளிவந்த கவிஞர் அம்பியின் யாழ்பாடி கவிதை நாடகம்.

  • வர்த்தகசேவையில் சில்லையூரார் தொகுத்துவழங்க, எஸ்.ராம்தாஸ் எழுதி நான் தயாரித்த கோமாளிகளின் கும்மாளம் தொடர் பின்னாளில் கோமளிகள் திரைப்படமாக உருவாகி சாதனை படைத்தது. வானொலி நாடகமொன்று திரைப்படமான வரலாறு அது. இந்நாடகத்தில் பிறப்பால் பிராமனரான ராம்தாஸ் மரிக்கார நடிக்க, நான் ஐயர் பாத்திரமேற்றேன்.

  • உலக குடும்பத்திட்ட அமைப்புக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாய்த் நான் நெறிப்படுத்தித் தயாரித்த ஒருவீடு கோயிலாகிறது நாடகம் நடிகர் திலகம் சிவாஜிகனேசன் அவர்களே தொடர்ந்து விரும்பிக்கேட்ட நாடகத் தொடர் எனும் பெருமை பெற்றது. (பிரதான பாத்திரத்தில் கேப்டன் சாம்பசிவமாக பாத்திர மேற்று நடித்தேன் முதன் முதலில் நடிகர் திலகத்தை சந்தித்த போது அந்தப் பெயரிலேயே என்னை அழைத்தார் நடிகர்திலகம்).

  • பரீட்சார்த்த முயற்சிகளில் பத்மஸ்ரீ ஜெமினிகனேஷ், நடிகை ஸ்ரீவித்யா, ஐ.எஸ்.ஆர். போன்ற தென்னிந்தியக் கலைஞர்களும் நமது இலங்கைக் கலைஞர்களும் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே தனித்தனியாகவே ஒலிப்பதிவு செய்து பின் தொகுத்துத் தயாரித்த அனிச்சமலர்கள் (எம்.அஷ்ரப்கான் எழுதியது).

  • ரயில் பயணத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்ட நாடகத்துக்காக, ரயிலிலேயே ஒரு நீண்ட பயணம்செய்து பின்னணி ஒலிக்கோர்வையை தத்ரூபமாக வைத்துத் தயாரித்த சக்கரங்கள்.

  • ஒலியிழைப்பேழை வடிவில் வெளிவந்து உலக வானொலிச்சேவைகள் பலவற்றில் ஒலிபரப்பான கிராமத்துக் கனவுகள் (கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதி அவரும் நடித்த இந்த நாடகவசனங்களே கலைஞர் கமலஹாசன் தெனாலியில் யாழ்மொழி வழக்கைப் பேசப் பாடமாய் அமைந்தது).   

IMGசஞ்சிகை நிகழ்ச்சிகள் :-

"ஒலிமஞ்சரி" - இன்று புகழ்பெற்று விளங்கும் எத்தனையோ எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரை உருவாக்கிய நிகழ்ச்சி.

"வானொலிமலர்" - தென்னிந்திய இலக்கிய உலகிலும், திரை உலகிலும் பல கவிஞர், எழுத்தாளர்களை உருவாக்கிய நிகழ்ச்சி.

"இசையும் கதையும்" - பல சாதனைகளைத் தடம்பதித்த நீண்டகாலத் தொடர் (நான் ஒரு கனவனாகிறேன் பலரின் நினைவில் அழியாத காவியம்).   

IMGஇசை நிகழ்ச்சிகள் :-

ஈழத்து மெல்லிசைப்பாடல்கள் : தமிழ் மெல்லிசை வடிவம் வானொலியில் உருவாக மறைந்த எஸ்.கே.பரராஜசங்கம் அவர்களுடன் இணைந்து ஆற்றிய பங்களிப்பு. அடியெடுத்துக் கொடுத்தது மெலிபன் கவிக்குரல்.

ஈழத்து பொப்பிசைப்பாடல்கள் : முதன்முதலில் தமிழ் பொப்பிசை எனும் வடிவத்தை நேயர்களுக்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி (பெயர்சூட்டிவர் மறைந்த விவியன் நமசிவாயம் அவர்கள்) இந்த ஆரம்பத்தின் பின் சுமார் 10ஆண்டு காலம் திரையிசைப் பாடல்களை விட நம் நாட்டுத் தமிழ் பொப்பிசைப் பாடல்களே ஜனரஞ்சக அந்தஸ்துடன் விளங்கின. ஜனத்திரள் நிறைந்த மேடைநிகழ்ச்சிகள் நாடெங்கிலும் நமது கலைஞர்களுக்குக் கணிசமான வருவாயைத் தேடிக்கொடுத்தன (வரலாறு படைத்தது பொப்பிசைப் புயல் இதில் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனும் கலந்துகொண்டு தமிழ் பொப்பிசைப் பாடல்களைப் பாடினார்).

இசைக்கோலம் : பல பரீட்சார்த்த முயற்சிகளால் இலங்கை இசைக்கலைஞர்களின் படைப்பாற்றல் திறமைகளை வெளிக்கொணர்ந்த வாராந்திரத் தொடர்.

மீனவநண்பன் : மீனவ நண்பர்களின் வாழ்வு, மற்றும் பண்பாட்டுக் கோலங்கள், கலைத்திறமைகளைப் பிரதிபலித்த நிகழ்ச்சத் தொடர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர் வாழும் பிரதேசங்களுக்குச் சென்று அவர்களோடு தங்கியும் படகில் சென்றும் ஒலிப்பதிவு செய்த ஆய்வுத்தொடர்.

கிராமத்தின் இதயம் : தமிழககிராமங்கள் பலவற்றுக்கும் சென்று அவரகளது கிராமிகலைகளை குறிப்பாக மக்கள் இசையை ஒலிப்பதிவுசெய்து வாரந்தோறும் ஒரட சஞ்சிகை வடிவில் தென்னிந்தியாவுக்கான ஒலிபரப்பில் வாரந்தோறும் வழங்கி நிகழ்ச்சி 3ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது.

வெற்றிப் பாதை : 10 ஆண்டுகளாக தென்னிந்தியாவுக்கான சேவையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முயன்று முன்னேறத் தூண்டும் அம்சங்களைத் தாங்கிய வாராந்த நிகழ்ச்சி.   

IMGபோட்டி நிகழ்ச்சிகள்:-

ஆம் இல்லை (பேச்சுத்திறன்) போட்டி

தேனிசை மழை (பாடும் திறன்போட்டி)

ஏழு கேள்விகள் (பொதுஅறிவுத் திறன்போட்டி)

பாட்டுக்குப் பாட்டு 32 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் தொலைக்காட்டிசிகளிலும் புகழ்பெற்ற நிகழ்ச்சி.   

IMGசந்திப்பு நிகழ்ச்சிகள் :-

இந்திய சுழல்பந்து வீச்சாளர் வெங்கட்ராகவனில் ஆரம்பித்து, தவத்திரு குன்னக்குடிகள், சுத்தானந்த பாரதியார், மறைந்த அமைச்சர் தொண்டைமான், நடிகர் திலகம், கமல்ஹாஸன், ரஜனிகாந்த், கவிக்கோ.அப்துல்ரஹ்மான், மு.மேத்தா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, அறிவுமதி, புலமைப்பித்தன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், இயக்குநர் திருலோகச்சந்தர், இலங்கையர்க்கோன் ஆர்.எஸ்மனோகர், ஜெமினிகணேஷ் மேஜர்சுந்தராஜன், வி.எஸ் ராகவன், கே.எஸ்.கோபாலகிருஷ்னன், நாகேஷ், சிவகுமார், கவுண்டமணி, விவேக், நாஸர், ஜெயராம், மாதவன், சார்ளி, விஜயகுமார், சரத்குமார், மஞ்சுளா, சௌகார்ஜானகி, சுஜாதா, குஷ்பு, ராதிகா, அபிராமி, திரையுலகின் முதலாவது இசையமைப்பாளர் எஸ்வி.வெங்கட்ராமன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்., ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், இசைஞானி இளையராஜா, கங்கைஅமரன், சங்கர்கணேஷ், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தேனிசைத்தென்றல் தேவா, சிற்பி, பரத்வாஜ், வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பழம்பெரும் பாடகர் வி.என்.சுந்தரம். இசைச்சித்தர். சி.எஸ்.ஜெயராமன், திருச்சிலோகநாதன். டி.எம்.எஸ், சீர்காழி, ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம். மலேசியாவாசுதேவன். ஜெயச்சந்திரன், உன்னிக்கிருஷ்னன், உன்னிமேனன், கிருஷ்ணராஜ், ஹறீஷ்ராகவேந்திரா, கார்த்திக். மாணிக்கவிநாயகம், இசையரசி எம்.எல்.வசந்தகுமாரி, பாலசரஸ்வதிதேவி, யூ.ஆர்.ஜீவரத்தினம், ஜிக்கி,ஜமுனாராணி, பி.லீலா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, சித்ரா, சுஜாதா, சுனந்தா, ஹரிணி, ஃபெபிமணி, சுஜாதா, சுனந்தா, சுவர்ணலதா.  

IMGநாடகமேடை நிகழ்ச்சிகள் :-

நடிகராக, பள்ளிவாழ்க்கையில் கட்டபொம்மன், கர்ணன், ஜான்சிராணிபாத்திரங்களில், பின்னாளில் கோமளிகள் தொடரில் தமிழ்ப்பண்டிதராகவும், முரடன் வீரமுத்துவாகவும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிலமேடைகளில்).

தயாரிப்பாளராக, புரோக்கர்கந்தையா,சுமதி போன்ற பலநாடகங்கள்.

நெறியாளராக, ராஜத்துரோகி சரித்திர நாடகம், அனார்க்கலி (முழுக்கமுழுக்க பெண்களே நடித்த நாடகம்), வீணைக்கொடியோன் (உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்காக யாழ் வீரசிங்கம் மண்டபததில் மேடையேற்றப்பட்டது. இதிலும் முழுக்கமுழுக்க பெண்களே நடித் தார்கள்).

மனத்திரை : இனப் பிரச்சினையைக் கருவாய்க கொண்ட நாடகம். ஒலிபரப்புக்கூட்டுத் தாபனம் நடத்திய நாடக விழாவில் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது, மற்றும் கோமாளிகள் குழு ஐரோப்பாவிலும், கனடாவிலும் மேடையேற்றிய பல நாடகங்கள்.

கோமாளிகள் : ஐயராக பிராமணவேடத்தில்.

நான்குலட்சம் : மொழிமாற்றுத் திரைப்படத்திற்கு நண்பன் ராம்தாஸு டன் இணைந்து வசன மெழுதி, பிரதான பாத்திரத்துக்கு குரல்கொடுத்தமை.

யார் அவள் : பின்னணிக்குரல்.

தெனாலி : யாழ்மொழி வழக்கில் அமைந்த வசனங்களை எழுதியதோடு, அம்மொழியைப்பேச கலைஞர் கமலஹாசனுக்குப் பயிற்சியும் அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆயினும் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.ரவிக்குமாரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாட்டு மக்களுக்கு பாஷை புரிந்தால்தான் திரைப்படம் வெற்றியளிக்கும் என்ற நிர்ப்பந்த்தில், கதைப்படி சிறுவயதிலே தமிழ்நாட்டுக் வந்துவிட்ட யாழ்ப்பாணத்துச் சிறுவன் வளர்ந்து வாலிபனாகும் போது, பாஷையிலும் கொஞ்சம் கலப்பிருக்கலாம் என்ற யதார்த்ததுக்குட்பட்டு இந்திய பேச்சுப்பாணியுடன் கலந்த யாழ்மொழிச் சாயலிலேயே வசனங்களை எழுதவேண்டியிருந்தது. யாழ்மண்ணில் நிகழ்ந்த சோகங்களை விபரிக்கும் காட்சிக்கான வசனங்களை முழுக்க முழுக்க என்னையே எழுத வைத்தார் கமல். ஆயினும் அன்றைய அரசியல் சூழல் காரணமாக வசனம் எழுதியவர் என, எனது பெயரைப் போட வேண்டாம் என்று வேண்டிக் கொண்டேன். இருப்பினும் படம் வெளியானபோது ஆரம்பத்திலேயே திரை முழுவதும் பெயர் பளிச்சிட வைத்து நன்றியைத் தெரிவித்திருந்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இந்த நீண்ட வசனங்களை ஒரே டேக்கில் நகைச்சுவையாக ஆரம்பித்து இறுதியில் கிளிசரின் போடமலேயே சோகத்தை உள் வாங்கி கண்களில் தாரை தாரையாகக் கண்னீர் வழிய ஒரே டேக்கில் கமல் நடித்த அற்புதம் இன்னும் கண்ணில் நிழலாடுகிறது.