நிகழ்வு விவரங்கள்

ஒரு மேடை... ஒரு நிகழ்ச்சி...

பின் செல்ல
IMG

இப்பதிவு சற்று தாமதமானது என்ற போதிலும், காலம் அள்ளிக்கொடுத்த வரம் குறித்துஎனது உணர்வுகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

'தமிழோசை' ஸ்ரீஸ்காந்தா சோமநாதனின் (Tamil Osai Sree Canada) ஏற்பாட்டில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற, தமிழ் ஒலிபரப்பின்  'இமயம்' B. H. அப்துல் ஹமீட் அவர்களின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் நூல் வெளியீட்டின்போது, உலகம் வியக்கும் தமிழ் ஒலிபரப்புச் சக்கரவர்த்தி B. H. அப்துல் ஹமீட் அவர்களின் கவனத்தைப்பெற்ற தருணங்களே ஒளிப்படத்தொகுப்பாகப் பகிரப்பட்டுள்ளது.
எனது ஒலிபரப்புப் பணி, இவ்வாண்டு கால் நூற்றாண்டை எட்டியபோதிலும், தமிழ் ஒலிபரப்பின் தனித்துவம் மிக்க அடையாளமான  B. H. அப்துல் ஹமீட் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நான் பணி செய்யவில்லையோ என்ற குறையும், வருத்தமும், ஏக்கமும் என்னுள் குடிகொண்டிருந்தது.

அந்த வருத்தம், அண்மையில் நான் CMR வானொலியில் இருந்து விடைபெற்ற பின்னர் அதிகமாகவே பற்றிக்கொண்டது. இனிமேல், அவர் கவனத்தைப் பெறுகிற வாய்ப்பு எவ்வாறு சாத்தியமாகும்..? என்ற ஏக்கம் ஆழ்மனத்திற்குள் உறைந்து கிடந்தது.( பல ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 2 முறை கனடாவில் அவரை சந்தித்துள்ள போதிலும்..)
இந்நிலையில் தான், B. H. அப்துல் ஹமீட் (B.H. Abdul Hameed) அவர்களின் கனடா வருகை தொடர்பிலும், அவர் முதன்முதலாக எழுதியுள்ள 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் நூல் வெளியிடப்படவுள்ளதாகவும், சமூகவலைப் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன். எனினும், என் நீண்ட நாள் ஏக்கம் போக்கும் மாபெரும் 'பரிசுப்பொதி'  எனக்காகக் காத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.

ஒரு சில நாட்களில், எனது ஒலிபரப்பு ஆசான்களில் ஒருவரும், செய்திப்பிரிவில் என்னை செதுக்கியவருமான P. விக்னேஸ்வரன் (P Wikneswaran Paramananthan)அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, கனடாவில் வெளியிடப்படவுள்ள B. H. அப்துல் ஹமீட் அவர்களின் நூல் தொடர்பில் 'ஆய்வுரை' நிகழ்த்துவதற்கு எனது பெயரை பரிந்துரை செய்ததாகவும், அதனை அப்துல் ஹமீட் அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

...அல்லா, ஜேசு, புத்தா, சிவன்... எல்லோரும் கூடி வந்து அருள்கொடுக்கும் கணமல்லவா? 'நிச்சயமாக...' என்ற பதிலைத்தவிர வேறு பதில் நான் கூற முடியுமா? அத்துடன், புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், படித்துவிட்டு தயார்படுத்துமாறும் சுருக்கமாக உரையாடலை முடித்துக்கொண்டார் விக்னேஸ்வரன் அவர்கள்.

அப்போது இரத்த அழுத்தம் உச்சந்தலையில் சுழியோடியது போன்ற உணர்வு. கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் சொல்வதானால், '...வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில், உருவம் இல்லாத ஒரு உருளை உருண்டதை...' அப்போது நான் உணர்ந்தேன். இருப்பினும், விக்னேஸ்வரன் அவர்கள் சொன்னது கனவா? இல்லை நனவா? என்ற மனப்போராட்டம் வேறு.  இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாகவேண்டும். P. விக்னேஸ்வரன் அவர்களிடம் இருந்து பாராட்டைப் பெறுவது என்பது குதிரைக் கொம்பு போன்றது. எனினும், சில பொறுப்புகள் கொடுக்கப்படும் போது தான், அவரின் அங்கீகாரத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவர் வெளிப்படையான வார்த்தைகளால் பாராட்டாதமையை, பெரும் குறையாகவே நான் கருதியதுண்டு.

இந்நிலையில், அவரிடம் நான் நல்ல புள்ளிகள் பெற்றுள்ளேன் என்பதை, B. H. அப்துல் ஹமீட் அவர்களிடம் என்னை பரிந்துரை செய்தமை மூலம் விக்னேஸ்வரன் அவர்கள் வெளிப்படுத்திவிட்டார். அது அவர் எனக்கு, வட்டியும் முதலுமாக அள்ளிக்கொடுத்த அங்கீகாரம் என்றே பூரிப்படைகிறேன். விக்னேஸ்வரன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் பதிவு செய்கிறேன்.

இவ்வாறு இருக்க, அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட B. H. அப்துல் ஹமீட் அவர்களுடைய ஒலி-ஒளிபரப்பு அனுபவத் பகிர்வாகவும், தமிழ் ஒலிபரப்பு மூலங்களின் ஆவணப்படுத்தலாகவும் எழுதப்பட்ட அவருடை நூலின் உள்ளடக்கம் படித்து வியப்பும், பிரமிப்பும் அடைந்தேன். Doctor ஆகவேண்டும், Engineer ஆகவேண்டும் என்ற இலக்குகளை மட்டுமே பிள்ளைகளிடம் அதிகம் திணித்த நம் சமூகத்தால், இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு தவப்புதல்வனின் பயணப்பாதையின் வழித்தடங்களை, எதிர்கால சந்ததிக்கான வழிகாட்டியாக B. H. அப்துல் ஹமீட் அவர்கள் சமர்ப்பித்துள்ளார்.
அது ஒரு தமிழ் பேசும் மகானின் சாதனைச் சரிதம்.

மேலும், அரை நூற்றாண்டுகளாக அவரோடு பயணப்பட்ட ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்ட நூலாகவும், ஈழத்திலும், தமிழகத்திலும், புலத்திலும் (ஒரு சில தவிர), கடந்த கால் நூற்றாண்டாக நலிவடைந்து, இழிவடைந்து, 'பண்ணித்தமிழ்' பேசும், பைந்தமிழைச் சொல்லுச் சொல்லாக பிதுக்கி...துப்புகின்ற வானொலிகள், தொலைக்காட்சிகள், ஒலி -ஒளிபரப்பாளர்கள்  குறித்தும் தன்னுடைய வேதனையை அவர் பகிர்ந்துள்ளார். இவ்வாறான ஒரு நிலை, நல்ல தமிழை, ஆதாராமாகக் கொண்டு இன்றுவரை இயங்குகின்ற எஞ்சியுள்ள ஊடகங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்ற எனது நீண்ட கால அச்சத்தையும்  அவரது எழுத்து புலப்படுத்தியுள்ளது.

எனினும், தமிழ் ஒலிபரப்பின்  ஒரு பல்கலைக்கழகமாக விளங்கும் ஒருவரின் படைப்புத் தொடர்பில் 'ஆய்வுரை' என்ற பதம் எனக்குப் பொருத்தமற்றது என்பதால், என் பாணியில், என் உணர்வுகளையும் , கருத்துக்களையும், புரிதல்களையும் பதிவுசெய்தேன். அது அப்துல் ஹமீட் அவர்களுக்கு திருப்தியோ இல்லையோ? எனக்கு மகா திருப்தி. வாழ்க்கையில், ஒரு முறை மட்டுமே நடக்கும் அரிய  நிகழ்வாக அந்த நாள் அமைந்துவிட்டது.

இவ்வேளையில், ஒரு சுவையான நினைவு மீட்டல். 25 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை வானொலியின் 'நாளைய சந்ததி'  நிகழ்ச்சியில் ஒரு பயிற்சியாளனாக நான் பங்கேற்றுவந்த காலத்தில், ஒலிப்பதிவுக்கூடங்களை கடந்து  சக பயிற்சியாளர்களோடு ஒரு நாள் நாம் நடந்து செல்கையில், ஒரு சிறிய புன்முறுவலோடு B. H. அப்துல் ஹமீட்  அவர்கள் நம்மைக் கடந்து சென்றார். அப்போது அவரைக் கண்டதும் வளைந்து, நெளிந்து நாமும் உடல் மொழியில் அவருக்கான வணக்கத்தை வெளிப்படுத்தி நகர்ந்து சென்றோம். அப்போது, என் சக பயிற்சியாளர்களிடம் நான் கூறியது, ....ஒரு காலத்தில், அப்துல் ஹமீட்  என்ற மாமேதையின் அருகால் நாம் நடந்து சென்றோம் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்று...

ஆனால், 25 ஆண்டுகள் கடந்த பின்னர், அந்த 'மாமேதை' என் தோளில் கைவைத்து, நெஞ்சோடு அரவணைத்து, என் கரங்களை இறுகப்பற்றி தனது அன்பை வெளிப்படுத்திய தருணங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாத பரவச நிலை. ஒரே ஒரு நிகழ்ச்சி.. ஒரே ஒரு மேடை.. எனக்கான வரங்களை மொத்தமாக அள்ளிக் கொடுத்ததில் பெரு மகிழ்ச்சி. மேலும், மேடை நிகழ்ச்சி  ஆரம்பமாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, '...நீங்கள்  எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு (உரைக்கு) ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை...' என்ற வருத்தத்தையும் பெருமனதோடு அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அந்த வார்த்தைகளும், வாஞ்சையும், வாய்ப்பும் எனக்கான பல நூறு அங்கீகாரங்களுக்குச் சமானமானது என்பதையே, தாழ்மையுடன் பகிர விரும்புகிறேன்.
மேலும், என் பூரிப்பைத்  தனது பூரிப்பாகக் கருதி, எனது உரை தொடர்பில்  பொதுவெளியில் என்னை பாராட்டி மகிழ்ந்த மூத்த ஒலி - ஒளிபரப்பாளர் V. N. மதியழகன் (V.N. Mathialagan) அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் பதிவு செய்கிறேன்.

அத்துடன், என்றும் இல்லாத இன்ப அதிரிச்சியாக, உங்கள் உரை நன்றாக இருந்தது என்று, மேடையில் வைத்தே நற்சான்றிதழ் வழங்கிய P. விக்னேஸ்வரன் அவர்களுக்கும் எனது வியப்புடன் கூடிய  நன்றி.
மேலும், அன்று வழமை போல, என் நாவிற்க்குள் புகுந்து எனைக் காத்த 'கலைவாணி'க்கும், சிரம் தாழ்த்திய வணக்கம்.
 
நிறைவாக, அந்த மகிழ்ச்சியான  தருணங்களை, ஒளிப்படங்களாகப்    பதிவாக்கிய ஐயா (Perinpanathan Sinnathambi Kandiah)  மற்றும்  தம்பி (Kajan K Parasakthy) ஆகியோருக்கும் நெகிழ்ச்சியான நன்றி.